அப்பா கொடுத்த ஊக்கம், அண்ணா கொடுத்த தைரியம், நண்பர்கள் கொடுத்த உற்சாகம் எல்லாம் சேர்ந்து என் அம்மாவின் கண்ணீருக்கும் நடுவில், என் கண்ணீரை மறைத்து, விமானம் ஏற வைத்தது.
தனிமை பயனம்......அதுவும் நெடுந்தூரப்பயணம், அடிவயிற்றை கலக்கியது.பயந்து விழிக்கும் எனக்கு ஆறுதலாக என் பக்கத்து இருக்கையில் ஒரு 60 வயது மதிக்க தக்க இந்திய பெண். கணிவான பார்வையாலும், கலகலப்பான தன் பேச்சாலும் என்னை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு கொண்டுவந்தார்.இன்று வரை அந்த அன்பு 'ஆண்டி'யின் அன்பு தொடர்கிறது!

9th std படிக்கும்வரை சனிக்கிழமைகளில் காலை 10லிருந்து 12 மணிவரை பரதநாட்டிய வகுப்புகள் இருக்கும், ஒரு மாமிகிட்ட கத்துக்கிட்டேன். வழக்கமா அப்பா அந்நேரம் தான் சேம்பர் போவாங்க, ஸோ அப்பாவே கார்ல drop பண்ணிட்டு லங்சுக்கு வீட்டுக்கு போறப்போ பிக் பண்ணிட்டு போவாங்க என்னை.
ஒரு சனிக்கிழமை அப்பாவுக்கு வேற வேலை இருந்ததால, என்னை சைக்கிள் எடுத்துட்டு டான்ஸ் க்ளாஸ் போக சொல்லிட்டாங்க, நான் சைக்கிள்ள போய்கிட்டேயிருந்தேனா.....தீடீர்னு சைக்கிள் செயின் கழண்டுக்கிச்சு, என்ன பண்றதுன்னே தெரில, பேந்த பேந்த முழிச்சுட்டு நின்னுட்டு இருந்தேன், அப்போ அங்கே ஒரு பையன் பைக்ல வந்தான், என் பக்கம் பைக் நிறுத்திட்டு என்னாச்சுன்னு கேட்டான், நான் பதில் சொல்லாமலே சைக்கிள் செயினை பார்த்தேன், அவன் புரிஞ்சுக்கிட்டு, பைக் ஸ்டாண்ட் போட்டுட்டு, எனக்கு வந்து ஹெல்ப் பண்ணினான்.
"தாங்க்ஸ்" பாதி விழுங்கி, பாதி சொன்னேன் அவனுக்கு. அவன் பதிலுக்கு அழகா சிரிச்சான். அப்போதான் அவனுக்கு ஒரு தெத்துப்பல் இருந்ததை கவனிச்சேன். ரொம்ப நல்லாயிருந்தது அவனுக்கு அந்த தெத்துப்பல்.
கொஞ்ச தூரம் சைக்கிள போய்ட்டு திரும்பி பார்த்தேன் அந்த பையன் போய்ட்டானான்னு, அவன் நான் போறதையே பார்த்துட்டு இருந்தான், எனக்கு சிரிக்கலாம இல்லியான்னு தெரில, நேரா முகம் திருப்பிட்டு ஒட்டினேன்.
அடுத்த வாரம் சனிக்கிழமை அப்பா கொண்டுபோய் விட்டாங்க, ஸோ நானும் அந்த சைக்கிள் செயின் பையனை மறந்துட்டேன். ஆனா, அதுக்கு அடுத்த வாரம் நான் சைக்கிளில் போகவேண்டியாதாப்போச்சு, டான்ஸ் க்ளாஸ் போற அதே வழியில், அதே இடத்தில், பைக் ஸ்டாண்ட் போட்டுட்டு அவன் உக்காந்திருக்கான்,
"அடப்பாவமே" அப்படின்னு மனசுல நினைச்சுட்டே வேகமா போய்ட்டேன், அவனை கண்டுகாத மாதிரி, அவன் உடனே பைக் எடுத்துட்டு, பின்னாடியே ஸ்லோவா வந்தான். கொஞ்சம் தூரம் போனதும், போனவாரம் நீ டான்ஸ் க்ளாஸ் வரலீயான்னு கேட்டானா..........அடப்பாவி என் டான்ஸ் க்ளாஸ் வரைக்கும் நீ follow பண்ணிட்டியான்னு யோசிச்சுட்டே நான் பதில் சொல்லல.
டான்ஸ் க்ளாஸ் முடிந்து வெளில வந்தா தெருமுனையில மரத்தடில அவன் நிக்குறான் பைக்கல.
எனக்கு பயமா போச்சு, ஏதோ சைக்கிள் செயின் மாட்டி கொடுத்தான், தாங்க்ஸ் சொல்லியாச்சு, அப்படியே கம்முன்னு போக வேண்டியதுதானே, ஒரு தடவை தெரியாத்தனமா திரும்பி பார்த்து சிரிச்சுட்டேன், அதுக்காக இப்படியா பின்னாடியே வருவான்...........அடக்கடவுளே இப்போ நான் திரும்பி போறப்போ என் பின்னாடியே வந்து என் வீட்டை கண்டுபிடிச்சிடுவானோ??
பயமாப்போச்சு........ஸோ நான் எங்க வீட்டுக்கு போகாம, வேற வழியா என் அப்பாவோட நண்பர் ராஜகோபால் மாமா வீட்டிற்கு போய்ட்டேன். "சும்மா வந்தேன், அப்பா சாயந்திரம் வந்து கூட்டிட்டுப்போவாங்க"ன்னு ஒரு கதை விட்டு, அங்கே இருந்து அப்பாவுக்கு phone பண்ணி evening வந்து அழைச்சுட்டு போனேன், ராஜகோபால் மாமாவுக்கு குழந்தைங்க கிடையாது, ஸோ என்மேல அலாதி ப்ரியம்.
அவன் பைக்ல உருமிக்கிட்டே தெரிவுல விர் விர்னு போய்ட்டு இருந்தான், நான் வெளியிலேயெ வரல.
அப்புறம் டான்ஸ் க்ளாஸ் ஒரு 3 மாதம் தான் போனேன், அப்பாவுடன்.
அதுக்கப்புறம் 'அவனை' பார்க்கவேயில்லை. மறந்தும் போய்ட்டேன்.
2 வருடம் கழித்து, நான் 12 ஆம் வகுப்பு படிக்கிறப்போ, என்கூட பவானின்னு ஒரு பொண்ணு கெமிஸ்டிரி ட்யூஷன் படிச்சா, அவ வேற ஸ்கூல், சாய்பாபா காலனியில் சொந்தக்காரங்க வீட்டுல இருந்து 12 ஆம் படிச்சா. கொடுமுடு அப்படின்ற ஒரு கிராமத்துப் பொண்ணு, கொஞ்சி கொஞ்சி அழகாக கோவைத் தமிழ் பேசுவா. என்கிட்ட நல்லா பழகிட்டா, அவ கிராமத்து பெண்ணாட்டும் பேசுவதால் இந்த நாகரீக அம்மனிகள் எல்லாம் அவளை கண்டுக்க மாட்டாங்க,ஆனா நான் பேசுவேன் அவகிட்ட, ஸோ அவளுக்கு என்மேல ரொம்ப அன்பு.
ரொம்ப அழகாக, அம்சமாக இருப்பா. பளிச்சுன்னு கலர் இல்லீனாலும்......வசீகரமா இருப்பா.
ஒரு நாள் கவர்மெண்ட் ஹாலிடே, அன்னிக்கு காத்தால ட்யூஷன் முடிந்ததும், ஸ்கூல் இல்லாத்தால் எல்லாரும் அரட்டை அடிச்சுட்டு இருந்தோம், அவ என்கிட்ட டி.பி.ரோட் KRS பேக்கிரிக்கு போகனும், லிஃப்ட் தர முடியுமான்னு கேட்டா.
ஓ.கேன்னு நானும் என் கைனடிக்கில் கூட்டிட்டு போனேன், கொஞ்ச தூரம் போனதும் தான் சொன்னா, அன்னிக்கு அவ லவ்வருக்கு பிறந்தா நாளாம், அவன் இவளுக்கு அந்த பேக்கரியில் treat தரானாம், அவன் கிட்ட என் நட்பை பற்றி கூட சொல்லியிருக்காலாம், இப்படி பேசிட்டே வந்தா,
பார்க்க சாதுவா இருக்கிற பவானிக்கும் காதலா??? அப்படின்னு நினைச்சுக்கிட்டேன்.
பேக்கிரி வெளியில் வண்டியை நிறுத்தினேன்,
" இதோ அவரு பைக்கல உகாந்து வெயிட் பண்றாரு" அப்படின்னா பவானி.
அவன் வேற யாரு.......அந்த 'சைக்கிள் செயின்' தெத்துப்பல் அழகனேதான்.
எனக்கும் கொஞ்சம் அதிரிச்சி, அவனுக்கும் ![ அவனுக்கு ரொம்ப அதிரிச்சியா ரியாக்ஷன் கொடுத்தான்]
பவானி என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தினாள்.
அவர்களுடன் கேக் சாப்பிடுமாறு வற்புறுத்தினாள், நான் மறுக்கவே,
"இரு ஒரு cadburys ஆச்சும் அவர் ப்ர்த்டேக்கு அவரு கையால வாங்கிக்கோ" என்று சொல்லிட்டு அவ சாக்லேட் வாங்க போனா.
" அதுக்கப்புறம் நீ டான்ஸ் க்ளாஸ்க்கே போலியா??" அவன் கேட்டான்.
"இல்ல..."
"உன்னை ரொம்ப தேடினேன்....பட் ஸாரி....டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன், ஸாரி"
"its ok, பவானி ரொம்ப நல்ல பொண்ணு, யு ஆர் ஸோ லக்கி டு ஹாவ் ஹிர், ஆல் தி பெஸ்ட்"
"யெஸ் ஐ நோ, ஷீ இஸ் மை லைஃப் "
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பவானி சாக்லெட்டுடன் அங்கு வர......சிறிய புன்னகையுடன், அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி விடைபெற்றேன்.
பவானி கல்லூரியில் பட்டப்படிப்பையும் கோவையிலேயே தொடர்ந்தாள், அவர்கள் காதலும் தொடந்தது........அடிக்கடி அவர்கள் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அழகானதொரு நட்பு எங்களுக்குள் மலர்ந்தது.
கடந்த ஆண்டு துவக்கத்தில் அவர்களது திருமணமும் சிறப்பாக நடைபெற்றது!

